சிலருக்கு ‘அபிராமி' எனும் காரணத்தால், சிலருக்கு 'கமல்' எனும் காரணத்தால், சிலருக்கு ‘ரோஷினி' எனும் காரணத்தால், சிலருக்கு 'மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதலல்ல' எனும் காரணத்தால்...
இப்படி, நம்மில் பலருக்கு வெவ்வேறு காரணங்களால், ‘குணா' திரைப்படம் நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்!
90-களின் ஆரம்பம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய உத்வேகத்தைத் தந்த காலம். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதைகளுடன் பல இயக்குநர்கள் வந்தனர். அந்தக் கதைகளுக்காக நாயகர்களும் தங்களின் ‘ஸ்டார் வேல்யூ' பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிக்க ஆரம்பித்தனர். அந்தக் கணக்கை கமல் ஆரம்பித்து வைத்தார் என்று சொன்னால் அதில் மிகையில்லை.
மனநலம் பிறழ்ந்த நாயகன், நாயகனின் தாய் பாலியல் விடுதி நடத்துபவர், ‘ட்ரீம் சாங்'குக்குக்கூட வெளிநாடு செல்வதை நினைத்துப் பார்க்க முடியாத குகை லொகேஷன், தற்கொலையில் முடிகிற காதல், தன் ஹீரோயிசத்தைக் காட்டுவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை... வித்தியாசத்தை விரும்பும் கமல் இப்படியான திரைக்கதை ஒன்றைத் தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லைதான். ஆச்சரியம் என்னவென்றால், இப்படி ஒரு கதையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் எப்படி நம்பிக்கை வைத்தார் என்பதுதான்!
மனநலம் பிறழ்ந்த ஒருவன், தன் கனவு நாயகியைக் கைப்பிடிக்க நினைக்கிறான். அந்த நாயகியின் பெயர் அபிராமி. அது ஏன் அபிராமி? ‘அபிராமி அந்தாதி'யைப் படித்த காரணத்தால், தனது நாயகியின் பெயர் அபிராமி என்று நாயகன் முடிவு செய்துகொள்கிறான். அந்த நாயகியை முதன்முதலில் அவன் ஒரு கோயிலில் பார்க்கிறான். அவள் மீது அன்பு கொள்கிறான். அது அதீத அன்பாக இருக்கும் காரணத்தால், அவன் அவளைக் கடத்துகிறான். மனித நடமாட்டமில்லாத குகை ஒன்றில் அவர்கள் வாழத் தொடங்குகிறார்கள்.
நாயகியின் மீது அவன் வைத்திருக்கும் காதல் என்பது ஒரு விதத்தில் ஆன்மநேயக் காதலாக இருக்கிறது. அதனால் படத்தின் ஒரு காட்சியில், ‘உனக்கு என்ன வேணும்? நான் வேணுமா? என் உடம்பு வேணுமா?' என்று நாயகி கேட்கும்போது, ‘இல்லை, கல்யாணம்' என்று நாயகன் சொல்வான். இப்படி காமத்தைப் பொறுத்தாள்வது என்பது பெரும்பாலும் ஆன்மநேயக் காதலில் மட்டுமே சாத்தியப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
நாயகியைக் கடத்தியவுடன், கதையில் ஏற்படும் திருப்பங்களை எல்லாம் படத்தில் நாம் பார்த்திருப்போம். ஆனால், பார்க்க மறந்த சில விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன.
குறிப்பாக, மனநல மருத்துவரின் (கிரீஷ் கர்னாட்) அறையில், கமல் அந்த அறையைச் சுற்றிச் சுற்றி வந்து பேசும் காட்சி. இந்த ‘ட்ராக் ஷாட்' காட்சி மேக்ஸ் ஓஃபுல்ஸ் எனும் ஜெர்மன் இயக்குநரின் ‘தி இயர்ரிங்ஸ் ஆஃப் மேதாம் த' எனும் படத்தினால் ‘இன்ஸ்பையர்' ஆகி எடுக்கப்பட்டது என்று ஒரு தகவல் உண்டு.
இந்தக் காட்சியில் கமல் ஓரிடத்தில் ‘இப்ப போட்டீங்களே ஊசி, அது என்ன ஊசி?' என்று கேட்க, கிரீஷ் கர்னாட் ‘பென்டதால்' என்பார். பலர் இந்தக் காட்சியில் இது தேவையில்லாத ஒரு வசனமாக இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால், ‘பென்டதால்' எனும் வேதிப்பொருளைப் பற்றி நாம் சற்றுத் தெரிந்துகொண்டால், ‘கமல் அண்ட் கோ' திரைக்கதையை எவ்வளவு நுணுக்கமாகச் செதுக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
மனித உடலில் உள்ள மத்திய நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மையுள்ள அமில உப்புக்கு ஆங்கிலத்தில் ‘பார்பிச்சுரேட்' என்று பெயர். இவை பெரும்பாலும் ‘வெரோனால்' என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வெரோனால் என்பது ஒரு வகையான விஷம். அதில் இருக்கும் இன்னொரு முக்கியமான வேதிப்பொருள் ‘பென்டதால்'. இந்த பென்டதால், மருத்துவத் துறையில் தூக்கம், மயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பென்டதால் மருந்துக்கு, ‘உண்மையை வெளிக்கொண்டு வரும் மருந்து' என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த மருந்தை ஒருவருக்குச் செலுத்தினால், அவரை மேலும் சகஜ நிலைக்குக் கொண்டுவந்து நிறைய பேச, உளற வைக்க முடியும். அப்போது அவர் பல தகவல்களைச் சொல்வார். ஆனால், அவற்றில் எது உண்மை என்பது அலசலுக்கு உட்பட்ட தனி விஷயம்.
கமலுக்கு பென்டதால் மருந்தைச் செலுத்துவதன் மூலம், அவரின் ஆழ்மனத்திலிருந்து நிறைய விஷயங்களைப் பெற முடியும் என்ற காரணத்தால் மருத்துவர் அந்த ஊசியைப் போட்டிருக்கிறார். எதிர்பார்த்தபடி, கமலும், ‘இங்க எல்லாமே அசிங்கம். ரோஸி அசிங்கம், எங்க அம்மா அசிங்கம், அப்பா அசிங்கம்...' என்று பட்டியலிடுவார்.
கூகுள் இல்லாத காலத்தில், ‘பென்டதால்' பற்றி இப்படி ஒரு நுணுக்கமான காட்சியை வைத்ததில், தான் ‘காலத்தை முந்திச் செல்பவர்’ என்பதை நிரூபிக்கிறார் கமல். ஆனால், அதை அன்றைய ரசிகர்கள் (ஏன், இன்றைய ரசிகர்களும் கூடத்தான்) புரிந்துகொள்ள முடியாமல் போனது சோகம்!
ஆனால், அந்த பென்டதால் வாசம் எப்படியிருக்கும் என்பதை கமல்தான் சொல்ல வேண்டும். ஒருவேளை, கமல் சொல்லும் அந்த மலைக்குச் சென்றால் அந்த வாசனையை நம்மால் உணர முடியுமோ என்னமோ?
இந்த ‘ட்ராக் ஷாட்' காட்சியைப் போல, படத்தில் ‘இன்ஸ்பையர்' ஆன காட்சிகள் நிறைய உண்டு. உதாரணத்துக்கு, கிளைமேக்ஸ் காட்சிக்கு முந்தைய காட்சியில் அஜய் ரத்னம் உள்ளிட்ட போலீஸாருடன் டாக்டர் ஒருவரின் வீட்டில் கமல் சண்டையிடுவது போன்ற ஒரு காட்சி. அதில், திடீரென்று போலீஸாரின் துப்பாக்கி ‘பல்ப்' ஒன்றைச் சுட்டுவிடும். அந்தக் காட்சியை திலீப் குமார் நடித்த இந்தித் திரைப்படமான 'கங்கா ஜம்னா' படத்தில் வரும் அதேபோன்ற காட்சியை அடிப்படையாக வைத்து எழுதியதாகக் கமலே பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
கமல் இப்படி ‘இன்ஸ்பையர்' ஆனார் என்றால், இந்தப் படத்தைப் பார்த்து நிறைய பேர் உத்வேகம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மலையாள திரை இயக்குநர் சத்யன் அந்திக்காடு. ‘குணா' படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்' பாடல் வரியால் ஈர்க்கப் பட்டுத்தான் தன்னுடைய ‘ரசதந்திரம்' படத்தில் கதாநாயகிக்கு ‘கண்மணி' என்று பெயர் சூட்டியதாக, தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அந்திக்காடு
‘குணா' படத்தில் கதை தவிர, ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் என அனைத்திலும் ஒருவித பக்தி தோய்ந்த மென்சோகம் கலந்திருப்பதை உணர முடியும். ‘அபிராமி' என்ற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த நடிகை ரோஷினி இந்த ஒரே படத்துடன் காணாமல்போனது, தமிழ்த் திரைக்கு இழப்பு.
1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, ‘தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் ‘தளபதி' வசூலில் தப்பிக்க, ‘குணா' சறுக்கியது.
Note: Content copied from internet sources